Saturday, October 30, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-04 30.10.2010

03. கோபுரப்பட்டி





வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:



வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!

யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!.

வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!.

அவரே பரமஞானம்!

கடும்தவமும் அவரை அறிவதற்கே!

மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..!

எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..!

வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!



வாழ்வோ..! சாவோ..! எது நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில்தான் இருப்பேன் என்ற கொள்கையுடன் வைராக்கியமாக ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த வைணவர்கள் இருந்திருக்கின்றனர்..! இவர்கள் இறுதி நோக்கமாயுள்ள அரங்கனோடு ஒன்றியவர்கள்..! அரங்கனையும், அவர்களையும் பிரித்தல் என்பது இயலாது..! இன்றும் கூட பலர் இவ்வாறு உள்ளனர்..! இவ்வாறு வைராக்கியமாக வைணவர்கள் வாழ்ந்து வந்த போது ஒரு கொடும் பாதகம் நிகழ்ந்தது..!



1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.

இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.



அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் - இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.



வைணவம் காத்த ஊர் - வைணவம் வளர்த்த ஊர்.



ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.



பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்

தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்

சயனம் பால சயனம்

தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.



கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 0800 மணி முதல் 1200 மணி வரை

மாலை 0500 மணி முதல் 0730 மணி வரை

.

அர்ச்சகரின் அலைபேசி எண் +91 96002 66426.



வழி மண்ணச்சநல்லுார் - அழகிய மணவாளம் - கோபுரப்பட்டி.









- தொடரும்...



இதன் முற்பகுதியினைக் காண இங்கே <கிளிக்> செய்யவும்.

No comments: