Saturday, October 30, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-04 30.10.2010

03. கோபுரப்பட்டி





வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:



வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!

யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!.

வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!.

அவரே பரமஞானம்!

கடும்தவமும் அவரை அறிவதற்கே!

மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..!

எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..!

வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!



வாழ்வோ..! சாவோ..! எது நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில்தான் இருப்பேன் என்ற கொள்கையுடன் வைராக்கியமாக ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த வைணவர்கள் இருந்திருக்கின்றனர்..! இவர்கள் இறுதி நோக்கமாயுள்ள அரங்கனோடு ஒன்றியவர்கள்..! அரங்கனையும், அவர்களையும் பிரித்தல் என்பது இயலாது..! இன்றும் கூட பலர் இவ்வாறு உள்ளனர்..! இவ்வாறு வைராக்கியமாக வைணவர்கள் வாழ்ந்து வந்த போது ஒரு கொடும் பாதகம் நிகழ்ந்தது..!



1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.

இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.



அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் - இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.



வைணவம் காத்த ஊர் - வைணவம் வளர்த்த ஊர்.



ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.



பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்

தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்

சயனம் பால சயனம்

தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.



கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 0800 மணி முதல் 1200 மணி வரை

மாலை 0500 மணி முதல் 0730 மணி வரை

.

அர்ச்சகரின் அலைபேசி எண் +91 96002 66426.



வழி மண்ணச்சநல்லுார் - அழகிய மணவாளம் - கோபுரப்பட்டி.









- தொடரும்...



இதன் முற்பகுதியினைக் காண இங்கே <கிளிக்> செய்யவும்.

Thursday, October 28, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-03 // 7.10.2010


02. உத்தமர் கோவில்



பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே





ஸ்ரீரங்கம் ரெங்கநாதனை மனதின் உள்வாங்கி தரிசனம் செய்த பின் புருஷோத்தமன் உறங்கும் உத்தமர் கோவிலுக்குப் பயணத்தைத் தொடங்குவீர்.



திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம். ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட - ஆழ்வார் மீது - ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.

ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹாலக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார். இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.

தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம்தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..? கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர். கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.



இங்கு பெருமாள் புஜங்க சயனம் - கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.



விமானம் உத்யோக விமானம்.



தீர்த்தம் கதம்ப தீர்த்தம்



ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ



மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் - ஒரு பாடல்



ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த தலம்.



பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும் இந்த கோவிலினை நன்கு தரிசனம் செய்வீர். நலம் பெறுவீர்.



கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை.













- தொடரும்...

Thursday, October 21, 2010

பஞ்ச சயன ரங்கம் பகுதி-02 // 7.10.2010

01.ஸ்ரீரங்கம்.



வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!



வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..! எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..! அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை. ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால்தான் வைணவத்திற்கு சிறப்பு..! இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..! அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள்புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர் “அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம். தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில். வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..! செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..! தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.



இங்கே பெருமாள் “புஜங்க சயனம்” - விமானம் ப்ரணவாக்ருதி விமானம். தாயார் - ஸ்ரீரெங்கநாயகி. எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் - ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்....“ என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர். இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள். இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!

இங்குள்ள தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி தீர்த்தம். தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம். இந்த அரங்கன் தர்மவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம். ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.

இன்னமும் மெய்யன்போடு இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன். தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை முதலில் தரிசித்து விடுங்கள்.



ஸ்ரீரங்கத்திற்கு முதல் நாள் இரவே அல்லது அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள். கோவில் காலை 6.15 மணிக்கு நடைத்திறப்பார்கள். தருமதரிசனத்தில் நின்றாலும் கூட எப்படியும் 7.30 மணிக்குள் தரிசித்து விடலாம். கூடுமானவரை வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளை முடிந்தவரை தவிருங்கள். பகவானைத் தரிசிக்க எல்லா நாட்களும் நல்ல நாட்களே..!

எல்லா நேரமும் நல்ல நேரமே..! இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது. ஆகவே துளசி மாலையோ, வேறு எந்த விதமான மாலைகளுக்கும் செலவு செய்யாதீர்கள்..! ஏதேனும் சமர்ப்பித்துத்தான் ஸேவிக்கவேண்டும் என்றால் உதிரித்துளசியோ அல்லது கொஞ்சமாக புஷ்பங்களேயோ வாங்குங்கள்.. இது போதும்..! அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..! உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..! அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு..!



மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்களுக்கு..

http://vainavathirupathigal.blogspot.com/2008_07_01_archive.html

Thursday, October 7, 2010

பஞ்ச சயன ரங்கம். பகுதி-01



“பஞ்ச“ என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள். இந்த “பஞ்ச“ என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பஞ்ச சயன ரங்கத்தில் ஒவ்வொரு வார்த்தையாக அவற்றின் சிறப்பினை காண்போமா..?

பஞ்ச நிலைகள்
பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.

பாஞ்சராத்ரம்
பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை. ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.

பஞ்ச சம்ஸ்காரம்
இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“. (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:
வாரம்
திதி
கரணம்
நட்சத்திரம்
யோகம்
என்பனவாகும்.

பஞ்ச கவ்யம்
பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம். சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும் இன்றியமையாதது.

பஞ்சாம்ருதம்
பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.

தீபத்திலும்
பஞ்ச முக விளக்கு
பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.

இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது. இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!.

புதன் நன்கு அமையப்பெற்றவர் அதிபுத்திசாலிகள். கணிதத் திறமை, கணினித் திறமை, கலைத்திறன் வாய்ந்தவர்கள்.

ஆக்கப்பூர்வமானவர்கள்....! அறிவு பூர்வமாக செயல்படுபவர்கள்..!

ஐந்து என்ற எண் இயக்க சக்தி..!

காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால்தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள், மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப்பெறுவர்.


சயனம்

'சயனம்' என்றால் 'நித்திரை' அல்லது 'உறங்குதல்' என்று பொருள். இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..! இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..! இது ஜாதகத்தின் 12ம் இடமாகும். இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!

சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..! நிம்மதியாக வாழ்வர்..!

பஞ்ச சயன ரங்கம்
ரங்கம் என்றால் அரங்கம். இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு. இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன்.

அரங்கன் என்றாலே அழகு..! இதனை நான் சொல்லவில்லை..! ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..! ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில் அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது...!


எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே


என்று பாடுகிறாள்.


திருச்சிக்கு நீங்கள் அடுத்தமுறை வருகைதரும் போது இந்த பஞ்ச சயன ரங்கத்தினையும், இந்த அரங்கத்தின் நாயகன் ரங்கனின் அமுதமான அழகையும், அருளையும்
தரிசியுங்கள். இவற்றை சில மணித்துளிகளிலேயே நீங்கள் தரிசிக்கமுடியும் என்பது இதன் முக்கிய சிறப்பாகும். அமுதை அள்ளிப்பருக வாரீர்..!



முதலாவதாக வரும் ஸ்ரீரங்கம் திவ்யதேசத்தினை இப்போது தரிசிப்போம்...!



- தொடரும்...