Thursday, October 7, 2010

பஞ்ச சயன ரங்கம். பகுதி-01



“பஞ்ச“ என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள். இந்த “பஞ்ச“ என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பஞ்ச சயன ரங்கத்தில் ஒவ்வொரு வார்த்தையாக அவற்றின் சிறப்பினை காண்போமா..?

பஞ்ச நிலைகள்
பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.

பாஞ்சராத்ரம்
பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை. ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.

பஞ்ச சம்ஸ்காரம்
இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“. (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:
வாரம்
திதி
கரணம்
நட்சத்திரம்
யோகம்
என்பனவாகும்.

பஞ்ச கவ்யம்
பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம். சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும் இன்றியமையாதது.

பஞ்சாம்ருதம்
பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.

தீபத்திலும்
பஞ்ச முக விளக்கு
பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.

இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது. இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!.

புதன் நன்கு அமையப்பெற்றவர் அதிபுத்திசாலிகள். கணிதத் திறமை, கணினித் திறமை, கலைத்திறன் வாய்ந்தவர்கள்.

ஆக்கப்பூர்வமானவர்கள்....! அறிவு பூர்வமாக செயல்படுபவர்கள்..!

ஐந்து என்ற எண் இயக்க சக்தி..!

காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால்தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள், மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப்பெறுவர்.


சயனம்

'சயனம்' என்றால் 'நித்திரை' அல்லது 'உறங்குதல்' என்று பொருள். இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..! இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..! இது ஜாதகத்தின் 12ம் இடமாகும். இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!

சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..! நிம்மதியாக வாழ்வர்..!

பஞ்ச சயன ரங்கம்
ரங்கம் என்றால் அரங்கம். இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு. இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன்.

அரங்கன் என்றாலே அழகு..! இதனை நான் சொல்லவில்லை..! ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..! ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில் அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது...!


எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே


என்று பாடுகிறாள்.


திருச்சிக்கு நீங்கள் அடுத்தமுறை வருகைதரும் போது இந்த பஞ்ச சயன ரங்கத்தினையும், இந்த அரங்கத்தின் நாயகன் ரங்கனின் அமுதமான அழகையும், அருளையும்
தரிசியுங்கள். இவற்றை சில மணித்துளிகளிலேயே நீங்கள் தரிசிக்கமுடியும் என்பது இதன் முக்கிய சிறப்பாகும். அமுதை அள்ளிப்பருக வாரீர்..!



முதலாவதாக வரும் ஸ்ரீரங்கம் திவ்யதேசத்தினை இப்போது தரிசிப்போம்...!



- தொடரும்...

No comments: