Thursday, October 21, 2010

பஞ்ச சயன ரங்கம் பகுதி-02 // 7.10.2010

01.ஸ்ரீரங்கம்.



வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!



வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..! எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..! அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை. ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால்தான் வைணவத்திற்கு சிறப்பு..! இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..! அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள்புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர் “அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம். தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில். வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..! செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..! தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.



இங்கே பெருமாள் “புஜங்க சயனம்” - விமானம் ப்ரணவாக்ருதி விமானம். தாயார் - ஸ்ரீரெங்கநாயகி. எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் - ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்....“ என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர். இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள். இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!

இங்குள்ள தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி தீர்த்தம். தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம். இந்த அரங்கன் தர்மவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம். ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.

இன்னமும் மெய்யன்போடு இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன். தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை முதலில் தரிசித்து விடுங்கள்.



ஸ்ரீரங்கத்திற்கு முதல் நாள் இரவே அல்லது அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள். கோவில் காலை 6.15 மணிக்கு நடைத்திறப்பார்கள். தருமதரிசனத்தில் நின்றாலும் கூட எப்படியும் 7.30 மணிக்குள் தரிசித்து விடலாம். கூடுமானவரை வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளை முடிந்தவரை தவிருங்கள். பகவானைத் தரிசிக்க எல்லா நாட்களும் நல்ல நாட்களே..!

எல்லா நேரமும் நல்ல நேரமே..! இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது. ஆகவே துளசி மாலையோ, வேறு எந்த விதமான மாலைகளுக்கும் செலவு செய்யாதீர்கள்..! ஏதேனும் சமர்ப்பித்துத்தான் ஸேவிக்கவேண்டும் என்றால் உதிரித்துளசியோ அல்லது கொஞ்சமாக புஷ்பங்களேயோ வாங்குங்கள்.. இது போதும்..! அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..! உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..! அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு..!



மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்களுக்கு..

http://vainavathirupathigal.blogspot.com/2008_07_01_archive.html

No comments: