Thursday, November 11, 2010

பஞ்ச சயன ரங்கம் / பகுதி-05 // 11.11.2010

04. திருஅன்பில்


கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்' என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிப்போம் வாரீர்.



அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் 'தவளை' என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு 'மண்டூக மகரிஷி' என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ''மண்டூக புஷ்கரிணி' என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.



வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.



திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.



பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)

தாயார் : அழகிய வல்லித் தாயார்

விமானம் : தாரக விமானம்

சயனம் : புஜங்க சயனம்.



(இங்கு ஒரு விஷயம்.! செய்வதெல்லாம் தெரிந்தே செய்துவிட்டு, இம்மாதிரியான தலங்களுக்கு வந்து நீராடினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு விமோசனமேயில்லை..! ஏதேனும் தவறாக செய்திருப்பின் முதலில் நாம் அந்த தவற்றினைச் செய்தமைக்காக மிகவே வருந்த வேண்டும். கடவுள் நம்மை மன்னிக்க உருக வேண்டும். நீராடியபின் மறந்தும் கூட மீண்டும் தவறு/தீது செய்தல் கூடாது. உளமாற பிரார்த்தித்து, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு பரிகாரங்கள் செய்தால்தான் பலன் நிச்சயம்.)



- தொடரும்...

No comments: